இனி எல்லாம் ஒரே இடத்தில்!. தேசிய நெடுஞ்சாலைகளில் வரப்போகும் புதிய வசதிகள்!. நிதின் கட்கரி மாஸ் அறிவிப்பு!
Humsafar: இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், சாலையோரங்களில் பல்வேறு வசதிகளை விரிவுபடுத்தவும் ஹம்சஃபர் என்ற புதிய கொள்கையை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார்.
அப்போது பேசிய நிதின் கட்கரி, பயணிகளுக்கு சுமூகமான, பாதுகாப்பான, இனிமையான பயணத்தை எளிதாக்க இந்தத் திட்டம் உதவும் என்றும் தூய்மையை மேம்படுத்துவதுடன் நீர் பாதுகாப்பு, மண் பாதுகாப்பு, கழிவு மறுசுழற்சி, சூரிய சக்தி போன்றவை இந்த கொள்கையை உருவாக்கும்போது மனதில் கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இந்தக் கொள்கையின் மூலம் பயணிகளுக்கு தரமான சேவையை உறுதி செய்யுமாறு அமைச்சக அதிகாரிகளை நிதின் கட்கரி கேட்டுக் கொண்டார். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பல பசுமை நெடுஞ்சாலைகள் பல வசதிகளை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த கொள்கையின் கீழ் உணவு வளாகம், சிற்றுண்டிச்சாலை, எரிபொருள் நிலையம், மின்சார வாகன சார்ஜிங் நிலையம், பார்க்கிங் வசதிகள், கழிப்பறை வசதி, குழந்தைகள் பராமரிப்பு அறை, ஏடிஎம் மையம், வாகன பழுதுபார்க்கும் மையம், மருந்தக சேவைகள் ஆகியவை தேசிய நெடுஞ்சாலை பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை உறுதி செய்யும்” என்று தெரிவித்தார்.
தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பல்வேறு சேவை வழங்குநர்களை ஒருங்கிணைத்து, பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதை இந்த ஹம்சஃபர் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.