இது தெரியுமா…! ஏடிஎம் கார்டு மட்டும் போதும்.., தனியாக பணம் கட்டி, விபத்து & ஆயுள் காப்பீடுகள் எடுக்க வேண்டியதில்லை..!
இன்றைய சூழலில் ஏடிஎம் கார்டுகளின் பயன்பாடு என்பது நமது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. ஏடிஎம் கார்டு நம் கைகளில் இருந்தால் பணத்தைச் செலவு செய்ய வங்கிகளில் கால் கடுக்கக் காத்திருந்து பணத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை. ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் மிக எளிதாகப் பொருட்கள் வாங்கலாம். ஏடிஎம் கார்டுகள் பல கூடுதல் நன்மைகளைத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. எனினும் ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் வங்கிகள் காப்பீடுகள் வழங்கும் என்பது பற்றி தெரியுமா?
இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் தொடங்கி தனியார் வங்கிகள் வரை அந்தந்த வங்கிகளின் விதிகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஏடிஎம் கார்டு என்று அழைக்கப்படும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள். இவற்றின் வகையைப் பொறுத்து ஏடிஎம் இயந்திரங்கள் வழியாக பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி மற்றும் வெவ்வேறு தேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்தி பணப் பறிமாற்றம் செய்தல் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அதையும் தாண்டி இந்த கார்டுகளின் மூலம் பயனர்களுக்கு மற்றொரு ஆதாயமும் உள்ளது. அதுதான் “டெபிட் கார்டு காம்ப்ளிமென்ட்ரி இன்சூரன்ஸ் திட்டம்” (Complimentary Insurance Cover) என்ற பெயரில் வழங்கப்படும் விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம். இதர காப்பீட்டுத் திட்டங்களைப் போல மாதாந்திர அல்லது வருடாந்திர தவணை பணமெல்லாம் இதற்கு கட்டத் தேவையில்லை. மாறாக, நீங்கள் பயன்படுத்தும் டெபிட் கார்டுகளுக்காக வருடந்தோறும் ஒரு தொகை உங்களது வங்கியால் பிடித்தம் செய்து கொள்ளப்படும். இதிலிருந்து ஒரு பகுதி குறிப்பிட்ட பயனரின் சார்பில், வங்கி பிற காப்பீட்டு நிறுவனங்களில் நிர்வகித்து வரும் காப்பீடு கணக்கிற்கு சென்றுவிடும்.
இந்த இன்சூரன்ஸ் பணத்தையே நீங்கள் விபத்து மற்றும் உயிரிழப்பு சமயங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், டெபிட் கார்டு பயன்படுத்தும் பெரும்பான்மையான மக்களுக்கு இதுகுறித்த விவரம் ஏதும் தெரியாதது ஆச்சரியம் அளிக்கக் கூடியதாக உள்ளது. பொதுமக்கள் மட்டுமல்ல பல வங்கி ஊழியர்களுக்கே இப்படியொரு காப்பீட்டு திட்டம் இருப்பது தெரியவில்லை என்று கூறுகிறார் வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வரும் சுனில் குமார். இதனால் மிக அரிதாகவே வங்கிக் கணக்காளர்கள் இந்தக் காப்பீட்டுத் தொகையைக் கோரி வங்கிகளில் விண்ணப்பிப்பதாகவும், வங்கிகளும் அதுகுறித்த பயிற்சியை ஊழியர்களுக்கு வழங்குவதில்லை என்றும் தெரிவிக்கிறார்.
மேலும் பேசிய அவர், பெரும்பான்மையான வங்கிகள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் இது போன்ற இன்சூரன்ஸ் இருப்பது குறித்துச் சொல்வது இல்லை. அது ஊழியர் எண்ணிக்கையோடு தொடர்பு கொண்டது. எனவே, உங்களைப் போன்ற ஊடகங்கள் வெளியே சொன்னால்தான் உண்டு என்று கூறினார். ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமாக ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அதன் வருடாந்திர கட்டணம் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து அந்த கார்டின் படிநிலை இருக்கும். உதாரணமாக சில்வர், கோல்டு, டைமண்ட் என்ற படிநிலையில் இது இருக்கும். இதன் அடிப்படையில் உங்களின் இன்சூரன்ஸ் தொகையும் அமையும்.
வங்கிகள் பொது மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களோடு இணைந்து இந்த டெபிட் கார்டு காம்ப்ளிமெண்ட்ரி இன்சூரன்ஸ் கவரேஜ் என்று சொல்லும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. பெரும்பாலும் டெபிட் கார்டு இன்சூரன்ஸ் கவரேஜ் குறித்து அனைத்து முன்னணி வங்கிகளும் தங்களது வலைதளங்களில் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளன. அதன்படி விபத்து மற்றும் உயிரிழப்புகளுக்கு இன்சூரன்ஸ் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். இதில் ஒவ்வொரு வங்கிகளின் கொள்கைகளுக்கு ஏற்ப விதிமுறைகள் மாறும். அதன்படி, விபத்து நடந்த 3 மாதம் முதல் 6 மாதங்களுக்குள் பயனாளர் அல்லது அவர் சார்ந்தவர்கள் இன்சூரன்ஸ் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதில், வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படுதல், தனிப்பட்ட விபத்து காப்பீடு, விமான விபத்து காப்பீடு, பொருட்களை வாங்குவதற்கான பாதுகாப்பு பொருட்கள் இழப்பு மற்றும் சேதம் உள்ளிட்டவற்றுக்காக இன்சூரன்ஸ் பலன்கள் வழங்கப்படுகின்றன.