மழை பாதிப்புகளை தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு…! அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை..!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக நேற்று முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது, குறிப்பாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிக கன மழை எச்சரிக்கையும், தேனி விருதுநகர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் மாவட்ட மழை பாதிப்புகளை தெரிவிக்க வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் கணக்கினை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி மழை பாதிப்புகளை 81485 39914 என்ற தமிழக அரசின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மழை பாதிப்பு உதவி தேவையை மக்கள் தெரிவிக்கலாம். மேலும் @tn_rescuerelief, @tnsdma என்ற ட்விட்டர் பக்கத்திலும், @tnsdma என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும் பாதிப்பை பதிவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் -1070, மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் - 1077 எண்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சமூக வலைத்தளங்கள் மூலமும் பாதிப்புகளை தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.