போன் எடுக்காதது ஒரு குத்தமா?… அதுக்குனு இப்படியா!… 150 முறை!... மனைவியை கொலை செய்த கொடூர போலீஸ்!
கர்நாடகாவில் போன் எடுக்காத ஆத்திரத்தில் மனைவியை போலீஸ் கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த ஹோசக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பிரதீபாவுக்கும், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் என்பருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. சாம்ராஜ்நகர் காவல் நிலையத்தில் கிஷோர் காவலராக பணியாற்றி வந்துள்ளார். பிரதீபாவுக்கு நண்பர்கள் வட்டாரம் பெரிது என்று கூறப்படுகிறது. இதனால், திருமணத்திற்கு பிறகு தினமும் நண்பர்களுடன் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசியதாகவும் தெரிகிறது.
இதில் பல ஆண் நண்பர்களிடமும் பேசிய போது, சந்தேகமடைந்த கிஷோர், மனைவி பிரதீபாவிடம் அவர்களெல்லாம் யார், ஏன் அவர்களுடன் பேசுகிறாய்? என கேள்வி எழுப்பி சண்டையிட்டுள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்த நிலையில் பிரதீபா, கருவுற்று பிரசவத்திற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இதையடுத்து, அவ்வபோது போன் செய்து, குழந்தை எப்படி உள்ளது என விசாரித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக மனைவிக்கு தொலைபேசி தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது போன் வெயிட்டிங்கில் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து கிஷோர் மீண்டும் மனைவியை யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்டு கடுமையான வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.
இதைப் பார்த்த பிரதீபாவின் தாயார், “தொடர்ந்து அழுது கொண்டிருந்தால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும்” என்று கூறி கிஷோரின் போனை எடுக்கவேண்டாம் என்றும் செல்போனை சைலண்ட்டில் வைக்குமாறும் மகளிடம் கூறியுள்ளார். இதன்படி பிரதீபாவும் தனது செல்போனை சைலண்ட்டில் வைத்துவிட்டு குழந்தையை கவனிக்கத் தொடங்கியுள்ளார். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் கிஷோர் 150 முறை மனைவிக்கு போன் செய்தும் அங்கிருந்து எந்த பதிலும் இல்லாததால் ஆத்திரமடைந்துள்ளார்.
இதையடுத்து, இரவோடு இரவாக மனைவியின் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு பிரதீபா இருந்த அறைக்குள் நுழைந்த கிஷோர் அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, பிரதீபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்த துண்டால் பிரதீபாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தனது பாக்கெட்டில் இருந்த பூச்சி மருந்து எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
சம்பவம் குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தற்கொலைக்கு முயன்ற கிஷோரை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனையின் அனுப்பி வைத்துள்ளனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரதீபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிஷோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.