எண்ணெய் இல்ல.. இது தான் முக்கிய வில்லன்.. இதயத்தை ஆரோக்கியமாக வைக்க மருத்துவர் சொன்ன சீக்ரெட்!
இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கிய குற்றவாளி எண்ணெய் தான் என்று நம்மில் பலரும் நம்பி கொண்டிருப்போம். ஆனால் மருத்துவர்கள் வேறொரு காரணத்தை சொல்கின்றனர். நாட்டின் சிறந்த இதயநோய் நிபுணர்களில் ஒருவரான டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி இதயத்தை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது குறித்து சில உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஆரோக்கியமான உணவுடன் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இதுகுறித்து பேசிய அவர் " இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகளில் பலரும் எண்ணெய்யை குறை சொல்கின்றனர். ஆனால் இனிப்புகள், சர்க்கரை, சாதம், சப்பாத்தி… கார்போஹைட்ரேட் தான் வில்லன்..” என்று கூறினார்.
ஸ்மார்ட்வாட்ச் மூலம் தினசரி நடவடிக்கைகளை கண்காணிப்பது முதல் இதய ஆரோக்கிய பரிசோதனைக்காக CT ஆஞ்சியோகிராஃபி வரை, இதய ஆரோக்கியத்தை பராமரிக்க புதிய வழிகளை பின்பற்றுமாறு தேவி பிரசாத் ஷெட்டி அறிவுறுத்தி உள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் “இளைஞர் அல்லது விளையாட்டு வீரருக்கு மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் அது தேசிய செய்தியாகிறது. பொதுவாக வேலை, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை மற்றும் கோவிட்-19 தடுப்பூசிகளை குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் இவை காரணங்கள் இல்லை.
உண்மையான காரணம், அந்த மக்கள் ஒருபோதும் இதய நோய்க்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் CT ஆஞ்சியோகிராஃபி சோதனை செய்திருந்தால், அவர்களின் மரணம் தடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறினார்.
30 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு இந்தியரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் எனவும், தினமும் 10,000 படிகள் நடக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் பேசிய அவர் "உண்மையாகவே நீங்கள் ஃபிட்டாக இருக்கவும், உங்கள் 95வது பிறந்தநாளை உங்கள் கொள்ளு பேரக்குழந்தைகளுடன் நின்று கேக் வெட்டி கொண்டாடவும் விரும்பினால், நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும், நடக்க வேண்டும் மற்றும் யோகா செய்ய வேண்டும்.
அனைவரும் ஸ்மார்ட்வாட்ச் அணிய வேண்டும், ஒவ்வொரு நாளும் 10,000 படிகள் தவறாமல் நடக்க வேண்டும். நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இதயப் பிரச்சனைகள் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. நடைபயிற்சி மேற்கொள்வதால் டிமென்ஷியா, புற்று நோய் பாதிப்பு குறைவாக உள்ளது. நடைபயிற்சி மேற்கொள்வோரின் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.
இந்தியர்கள் தங்கள் இதய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தொலைபேசியில் பேசும்போது ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவது போன்ற தினசரி நடக்கும் அடிகளின் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்வதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டறியவும் அவர் வலியுறுத்தினார். காற்று மாசுபாடு அதிகம் இந்த சுற்றுச்சூழலில் நம் இதய ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேறு வழியில்லை." என்றும் டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி தெரிவித்தார்.