நவம்பர் 2-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்..!! தமிழகம் நோக்கி வரும் புயல்..? அதி கனமழை எச்சரிக்கை..!!
இந்த ஆண்டு நவம்பரில் தென்னிந்திய பகுதிகளில் இயல்பைவிட அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், ”தமிழ்நாடு, காரைக்கால், கடலோர ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் இயல்பை விட அதிகமாக இருக்கும். தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பரில் இயல்பை விட 123% அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நவம்பர் 2-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும். அதாவது, இயல்பை விட 23% அதிகமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில், அடுத்தடுத்த சலனங்களும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்கள் இதனால் அதிகப்படியான மழை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவம்பர் 5ஆம் தேதிக்குள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என எச்சரித்துள்ளது. இதனால், நவம்பர் 2-வது வாரத்தில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும், சில பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.