தமிழ்நாட்டில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை..!! கட்டுப்பாட்டு அறை திறப்பு..!! தயார் நிலையில் மீட்புக்குழு..!!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று நிலவக்கூடும். பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 16ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இது, வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை அவசர உதவிக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பருவமழை எதிரொலியால் 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு மாநில பேரிடர் மீட்புக் குழுவிலும் 30 என்ற விகிதத்தில் 540 பேர் தயார் நிலையில் உள்ளனர். மணிமுத்தாறு, கோவை புதூர், பழனி, ஆவடி ஆகிய பகுதிகளுக்கு தலா 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன.