"CAA சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.." மேற்கு வங்காளத்தில் மோடி வாக்குறுதி.!!
CAA: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தல் வாக்குப்பதிவில் 3 கட்டங்கள் முடிவடைந்த நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது.
42 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் 7 கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் மேற்குவங்க மாநிலத்தில் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்துவதற்காக பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் பாரக்பூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி CAA சட்டம் அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி "மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தங்கள் மாநிலத்தில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன் என கூறுகிறார். ஆனால் பாஜக குடியுரி வைத்திருக்க சட்டத்தை அமல்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது" எனக் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஊடுருவல்கள் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் 2019 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலை விட அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் வெற்றி பெற்று CAA சட்டத்தை நிச்சயமாக அமல்படுத்துவோம் என தெரிவித்துள்ளார். கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து அந்த மாநிலங்களின் முன்னேற்றத்தை முற்றிலுமாக தடுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.