JN.1 வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை!… மத்திய சுகாதாரத்துறை!
இந்தியாவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஜேஎன்1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஜேஎன்1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியா உட்பட40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜேஎன்1 என்ற புதிய வகை கரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த சூழலில் புதிய கரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பின் (இன்சாகாக்) தலைவர் என்.கே.அரோரா கூறியதாவது:
இந்தியாவில் சுமார் 88 சதவீதமக்களுக்கு 2 தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட, இணைநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பரவும் ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. இந்த வகை கரோனா வைரஸால், காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது.
அதேநேரம், நாடு முழுவதும் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். எந்த வகையான கரோனா வைரஸ் பரவுகிறது என்பதை கண்டறிய சளி மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்பவேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம்.பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்தால் போதும். அச்சம்அடைய தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் பூனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. தற்போது குளிர்காலம், பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.இதன்காரணமாக ஜேஎன் 1 வைரஸ் வேகமாக பரவுகிறது. இதன் வீரியம்குறைவாகவே உள்ளது. எனினும் வைரஸ் பரவலை தடுக்க அந்தந்தநாடுகளின் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.