”கேரளாவுக்கு யாரும் போகாதீங்க”..!! மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!
கல்லூரி மாணவர்கள் கேரளாவுக்கு கல்வி சுற்றுலாச் செல்வதை தவிர்க்க வேண்டும் என உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு அருகே 14 வயது சிறுவன் நிஃபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் இருந்த சிலர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து தமிழ்நாடு - கேரள எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தமிழ்நாடு சுகாதாரத்துறை கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை சார்பில், அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள், கேரளாவுக்கு கல்விச் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மண்டலத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலாவாக கேரளாவுக்கு செல்வது வழக்கம். தற்போதும், பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் கேரளாவுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தான், நிபா வைரஸ் அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டி இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Read More : KGF யுனிவர்ஸில் நடிகர் அஜித்குமார்..!! வெளியான மாஸ் அப்டேட்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!