NEET UG | நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய போதுமான ஆதாரம் இல்லை..!! - உச்சநீதிமன்றம்
2024 இளநிலை நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவிற்கு போதிய முகாந்திரம் இல்லை என்றும் நீட் மறு தேர்வு நடத்தப்படாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவுகள் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது. நீட் தேர்வில் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டதாகவும், முறைகேடாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.
நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே விற்பனை செய்ததாக உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யும் அளவுக்கு போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறிய சுப்ரீம் கோர்ட்டு மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது. எனத் தெரிவித்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது இல்லை எனவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும், ஐஐடி மெட்ராஸ் அளித்துள்ள அறிக்கையை நாங்கள் ஆய்வு செய்து இருக்கிறோம் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
Read more | எத்தியோப்பியாவில் நிலச்சரிவு : 150-ஐ கடந்தது பலி எண்ணிக்கை..!!