இனி காகித குடுவையில் மது..? மிகப்பெரிய சமூக சீரழிவு..!! மாணவர்கள் மில்க் ஷேக் போல் குடிப்பார்கள்..!! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை..!!
90 மிலி மதுவை காகித குடுவைகளில் (டெட்ரா பேக்) அடைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக வெளியாகி வரும் தகவலுக்கு, தற்போது எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணங்களை தடுக்கும் நோக்கில் 90 மிலி மதுவை காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான கருத்துகளை தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். காகிதக் குடுவைகளில் 90 மிலி மது விற்கப்பட்டால் அது தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டின் இளைய சமுதாயத்தையும் சீரழித்து விடும். 90 மில்லி மதுபானம், காகித குடுவைகளில் விற்கப்பட்டால், அது மில்க் ஷேக், பழச்சாறுகள் போலவே இருக்கும்.
இதனை மாணவர்கள், சிறுவர்கள் பயன்படுத்தினாலும் மற்றவர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. நொறுக்குத் தீனிகளைப் போல புத்தகப் பைகளில் வைத்து எடுத்துச் செல்லும் நிலை உருவாகி விடும். அதனால், 90 மிலி மது அறிமுகம் செய்யப்படுவது மிகப்பெரிய சமூக சீரழிவை ஏற்படுத்தி விடும்” என்று அன்புமணி எச்சரித்துள்ளார்.