For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”இனி இந்திரா காந்தி பெயரில் சினிமா விருதுகள் இல்லை”..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

01:46 PM Feb 14, 2024 IST | 1newsnationuser6
”இனி இந்திரா காந்தி பெயரில் சினிமா விருதுகள் இல்லை”     மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
Advertisement

சினிமாத் துறையில் சிறந்த படைப்புகளுக்கும் கலைத்துறையினருக்கும் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக இவை கருதப்படுவதால், ரசிகர்கள் மத்தியிலும் இந்த விருதுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டு. அதன்படி, கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இந்தாண்டு வழங்கப்பட உள்ளன. இதற்கான திரைப்படங்களை சமர்ப்பிக்கும் பணி கடந்த ஜனவரி 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

Advertisement

இந்தாண்டு வழங்கப்படவுள்ள தேசிய விருதுகள் மற்றும் அதன் பரிசுத்தொகையை சீரமைக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை சார்பில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு நடைபெற இருக்கும் 70-வது தேசிய விருது விழாவில் சில மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த மாற்றங்கள்தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு எழக் காரணம். இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் வழங்கப்பட்டு வந்த ‘சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது’ தற்போது ‘சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கான பரிசுத்தொகை இதற்கு முன்பு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி இயக்குநருக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. அதேபோல் பழம்பெரும் நடிகை நர்கீஸ் தத் பெயரில் வழங்கப்பட்டு வந்த ‘தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கீஸ் தத் விருது’ தற்போது ‘தேசிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தாதா சாகேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படத்துக்கு வழங்கப்படும் ‘ஸ்வர்ன் கமல் விருது’க்கான பரிசுத்தொகை ரூ.3 லட்சமாகவும், ‘ரஜத் கமல் விருது’க்கான பரிசுத்தொகை ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ’சிறந்த ஒலி வடிவமைப்பு விருது’க்கான பரிசுத் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags :
Advertisement