Election 2024 | "ஓய்வூதியம் கொடுக்க காசில்லை; 150 கோடியில் சமாதி தேவையா.?"... கொந்தளித்த சீமான்.!!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.
ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்ற தேர்தல்களைப் போலவே இந்த தேர்தலிலும் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இருக்கும் 40 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. அவர்களது கட்சியின் கோட்பாட்டின்படி 40 தொகுதிகளிலும் 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தனது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் .
இந்நிலையில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மகேஷ் ஆனந்த் என்பவரை ஆதரித்து பிரச்சாரம் செய்த சீமான் தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் தொகை பெறுவதற்காக பொதுமக்களை கையேந்த வைப்பது கொடுமையான ஒன்று என தெரிவித்தார். மேலும் இது ஒவ்வொரு தமிழனின் தன்மானத்திற்கும் ஏற்படும் இழப்பு எனவும் அவர் கடுமையாக பேசினார். தரமான கல்வி ஒன்றை மட்டுமே இலவசமாக எதிர்பார்க்கிறோம் என சீமான் முழங்கினார்.
மேலும் அந்தக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய சீமான் தமிழக அரசுக்கு அரசு ஊழியர்களின் மீது ஒருபோதும் அக்கறை இல்லை என குற்றம் சாட்டினார். அரசு ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு காசு இல்லை என கூறும் தமிழக அரசு 150 கோடி ரூபாய் செலவில் சமாதி கட்டுவது என்ன மாதிரியான ஒரு ஏமாற்று வேலை என கூறினார். தொடர்ந்து இந்த மண்ணும் மக்களும் வஞ்சிக்கப்பட்டு வருவதாக சீமான் கோபத்துடன் தெரிவித்தார்.