யார் சொன்னாலும் நடக்காது!... அவர்கள் எல்லாம் இலவு காத்த கிளி போல தான்!… அண்ணாமலை விவகாரத்தில் ஜெயக்குமார் கருத்து!
அண்ணாமலை தமிழகத்திற்கு முதலமைச்சர் ஆவார் என்பது இலவு காத்த கிளி போல தான் என்று ஆடிட்டர் குருமூர்த்திக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (Greatest of All Time) என்பது போல இன்றும் என்றும் மக்கள் மனதில் இருப்பவர் எம்ஜிஆர்.
பிரதமர் நரேந்திர மோடி எம்ஜிஆர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “எம்ஜிஆர் உலக அளவில் போற்றப்படும் மாபெரும் தலைவர். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவிப்பார்கள். அதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை” என்று பதிலளித்தார். மேலும் அவர், “இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு விருப்பப்படுபவர்கள் போகலாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சாதி மதம் கடந்தது. இராமர் கோவிலுக்கு நான் செல்லவில்லை. என்னை பொறுத்தவரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான். இறைவன் எங்கும் இருக்கிறான். ஜனவரி 22ஆம் தேதியை அரசியல் நிகழ்வாக மாற்றி உள்ளார்களா என்பது குறித்து சிறந்த நீதிபதிகளான மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்”என்றார்.
துக்ளக் நிகழ்ச்சியில் குருமூர்த்தி தமிழக முதலமைச்சராக அண்ணாமலை வர வேண்டும் என்று ரஜினிகாந்த் விரும்பியதாக தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “இது ஒரு அறையில் பேசிய விஷயம் ரஜினிகாந்த் சபையில் தெரிவிக்கட்டும் நான் பதில் சொல்கிறேன். அண்ணாமலை தமிழகத்திற்கு முதலமைச்சராவது என்பது இலவு காத்த கிளி போல தான் என்று கருத்து தெரிவித்தார்.