"இனி மெட்ரோ ரயிலுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி இல்லை"..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!
இனி சென்னை மெட்ரோ ரயிலுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விமான நிலையம் - விம்கோ நகர், சென்ட்ரல் - பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் மக்கள் என ஏராளமானோர் இந்த மெட்ரோ ரயிலில் தினமும் பயணிக்கின்றனர். வழக்கமாக, அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரயிலில் அதிகளவு கூட்டம் இருக்கும்.
நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இந்நிலையில், புறநகர் மின்சார ரயில் மற்றும் பேருந்துகளில் காலை நேரத்தில் பயணிக்கும் சிலர் இருக்கையில் அமர்ந்தே சாப்பிடுவார்கள். இதேபோல், மெட்ரோ ரயிலிலும் பலர் சாப்பிடுவதால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”இனி சென்னை மெட்ரோ ரயிலுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி இல்லை. சுமுகமான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்ய விதிகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.