சிறுத்தை இல்லை!. ராஷ்டிரபதி பவனில் காணப்பட்ட 'மர்ம விலங்கு'!. டெல்லி காவல்துறை விளக்கம்!.
Delhi Police: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பின் போது காணப்பட்ட மர்ம விலங்கு, ஒரு சாதாரண வீட்டுப் பூனை என்று டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகவும் பதவியேற்றார். கடந்த இரண்டு தேர்தல்களிலும் 282, 303 தொகுதிகளை கைப்பற்றி பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த நிலையில், இம்முறை கூட்டணி கட்சிகளின் துணை பாஜகவுக்கு தேவைப்பட்டது. எனவே, இந்த மூன்றாவது ஆட்சிக் காலத்தில் கூட்டணி கட்சியினருக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியுடன் மொத்தம் 72 பேரும் டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை, மாலத்தீவு, சீஷெல்ஸ், வங்கதேசம், மொரீஷியஸ், நேபாளம், பூட்டான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நேற்று இரவு 7.15 மணிக்கு சரியாக தொடங்கிய பதவியேற்பு விழாவில், முதலில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து, ராஜ்நாத் சிங், அமித் ஷா என தொடர்ந்து கேபினட் அமைச்சர்கள் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துகொண்டனர்.
இந்நிலையில், பதவியேற்பு விழாவின் போது ராஷ்டிரபதி பவனில் அடையாளம் தெரியாத ஒரு விலங்கு உலாவுவது நேரலை வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பாஜக எம்.பி., துர்கா தாஸ் மத்திய இணை அமைச்சராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துகொண்ட பின் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அவர் கையெழுத்து போட்டுவிட்டு எழுந்திருக்கும் போது அவருக்கு பின்னால் உள்ள கட்டடத்தில் சிறுத்தை அல்லது காட்டு பூனை போன்ற தோற்றம் கொண்ட விலங்கு நடந்துபோவதை காண முடிகிறது. இது நேரலையில் பதிவானதை அடுத்து பலரும் அதனை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இருப்பினும், அது பூனையா, காட்டு விலங்கா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இதுவரை தெரியவில்லை. சமூக வலைதளங்களில் பலரும் அது சிறுத்தையாக இருக்கலாம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சர்ச்சைகளுக்கு டெல்லி காவல்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது, பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பின் போது காணப்பட்ட மர்ம விலங்கு, ஒரு சாதாரண வீட்டுப் பூனை என்று டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளது. இதுபோன்ற அற்பமான வதந்திகளை கடைபிடிக்காதீர்கள்" என்றும் டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Readmore: ஷாக்!. விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ், குழுவினருக்கு உடல்நல பிரச்சனை!. பாக்டீரியா கண்டுபிடிப்பு!