"துன்புறுத்தவில்லை… கண்ணியமாக நடத்தினார்கள்"!! நீதிமன்றத்தில் சவுக்கு பதில்!!மே 28 வரை காவல் நீட்டிப்பு
காவல்துறையினர் துன்புறுத்தவில்லை, என்னை கண்ணியமாக நடத்தினார்கள் என்றும், கோவை சிறைக்கு பதிலாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் சவுக்கு சங்கர் நீதிபதியிடம் கூறியுள்ளார்.
பெண் காவலர்கள் குறித்து ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் அவதூறாக பேசிய வழக்கில் கடந்த
மே மாதம் 4ஆம் தேதி அன்று சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கோவை மற்றும் திருச்சி சைபர் க்ரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கில் ஆஜர்படுத்தப்படுவதற்காக நேற்று முன் தினம் சவுக்கு கோவை சிறையில் இருந்து திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி சைபர் க்ரைம் போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி தந்த நிலையில், போலீஸ் காவல் நிறைவு பெற்றதால் யூடியூபர் சவுக்கு சங்கர் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது காவல்துறையினர் துன்புறுத்தினார்களா என்று நீதிபதி கேட்ட கேள்விக்கு, காவல்துறையினர் யாரும் துன்புறுத்தவில்லை; கண்ணியமாக நடத்தினார்கள் என பதில் அளித்தார். மேலும் கோவை சிறையில் போதை பொருள் பயன்படுத்தி மனநலம் பாதிக்கப்பட்ட சிறை வாசிகளுடன் அடைக்கப்பட்டு உள்ளேன் என்பதால், தன்னை கோவை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதியிடம் சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரின் கோரிக்கையை கேட்ட நீதிபதி, இது தொடர்பாக கடிதம் கொடுத்தால் கோவை சிறை கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்வதாக பதில் அளித்த நீதிபதி, நீதிமன்றக் காவலை வரும் மே மாதம் 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
Read More: மம்தா பானர்ஜி குறித்து அவதூறு கருத்து.. உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!