எந்த நாடாக இருந்தாலும் அது இந்தியர் இல்லாத நாடாக இருக்காது...! அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...!
உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும் அது இந்தியர் இல்லாத நாடாக இருக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க வாழ் தமிழர்கள் மத்தியில் பெருமிதம்.
அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; சான் பிரான்சிஸ்கோவில் இருக்கிறேனா, சென்னையில் இருக்கிறேனா என்று சந்தேகப்படுகிற அளவிற்கு, தமிழ்நாட்டில் இருக்கிற உணர்வு உள்ளது. 1971ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வந்தார், அவரது மகனான நானும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற தகுதியோடு இப்போது அமெரிக்காவுக்கு வந்திருக்கிறேன். உலகின் மதிப்பு மிக்க அமெரிக்க நாட்டில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்களான உங்களை பார்க்கும்போது எனக்குப் பெருமையாவும், மகிழ்ச்சியாவும் இருக்கிறது.
உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும் அது இந்தியர் இல்லாத நாடாக இருக்காது. இந்தியர்கள் வாழுகிற நாடாகத்தான் உலகின் எல்லா நாடுகளும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, அமெரிக்கா என்பது இந்தியர்களை ஈர்க்கும் நாடாக எப்போதுமே இருந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா இருக்கிறது என்றால், 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது.
அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்குமான நட்பு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து வருகிறது. புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருப்பது தான் இதற்கு காரணம் என்றார்.