'ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை..!!' ; ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. 6.5 சதவீதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்குக் கடன் வழங்கும் விகிதமே ரெப்போ விகிதம் ஆகும். இந்த ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்டே வணிக வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குகின்றன. எனவே, ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால், வணிக வங்கிகளிடம் இருந்து கடன் பெறும் வட்டி விகிதமும் குறையும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். அதேபோல், ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டால், கடன் பெறும் வட்டி விகிதம் அதிகரிக்கும், பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்.
மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என கருதப்பட்ட நிலையில் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவிகிதத்திலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் தனிநபர் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதுகுறித்து, மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றமும் இல்லை. இந்த விகிதம் 6.5 சதவீதமாகவே நீடிக்கும். பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க ஏதுவாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை.
2024 - 25 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக நீடிக்கும். அது முதல் மற்றும் 3ம் காலாண்டில் 7.3 % ஆகவும், இரண்டு மற்றும் 4ம் காலாண்டில் 7.2% ஆகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Read more ; மாதவிடாய் காலங்களில் இதை சாப்பிட்டா வலி பறந்தே போய்விடும்…!