ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கார்டு அவசியம் இல்லை... இந்த APP இருந்தா போதும்...! அசத்தும் தமிழக அரசு
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பயன்படுத்த TNPDS என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இவர்களில் 6 கோடிக்கும் அதிகமான நபர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அனைவருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது, சர்க்கரை 1 கிலோ, ரூ. 13.50, கோதுமை ரூ.7.50, மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 13.60 – 14.20, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு கிலோ ரூ. 30.00, பாமாயில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் வாயிலாகப் பெற்று பயன்பெறும் வண்ணம் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 7.5.2021 முதல் 15 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு பயன்பாடு வந்ததில் இருந்து, எஸ்.எம்.எஸ் அனுப்புவது, பயோமெட்ரிக் என ஒவ்வொன்றாக டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பயன்படுத்த TNePDS என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரேஷன் சம்பந்தமான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
இதே போல கடையின் முகவரி, அமைவிடம், கடையின் விடுமுறை நாட்கள், வேலை நேரம் போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இந்த மொபைல் செயலியை இன்ஸ்டால் செய்வதன் மூலம் ரேசன் கார்டு தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த செயலியில் ஒவ்வொரு முறையும் லாகின் செய்ய ரேசன் கடையில் ரேசன் கார்டுக்கு பதிவு செய்த மொபைல் எண்ணையும், அதன் OTP கொடுக்க வேண்டும்.