நிபா வைரஸ்: தமிழகத்தில் தீவிர சோதனை..! மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டும்..!
கோவை மாவட்டம் தமிழக -கேரளா எல்லைப்பகுதியான வாளையார் சோதனைச்சாவடியில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நிபா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக - கேரள எல்லைப் பகுதிகளான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவை சேர்ந்தவர்களுக்கு நிபா வைரஸ் அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். மேலும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக கோவை மாவட்டத்தை பொறுத்தவரை வாளையார், வேலாந்தாவளம், வீரப்பகவுண்டனூர், வடக்காடு, செம்மனாம்பதி உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பரிசோதனையின் முடிவில் உறுதியானது. ஏற்கனவே கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் 16 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், நிபா வைரசால் அம்மாநிலத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 175 பேர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்பில் இருந்த 175 பேரில், 74 பேர் சுகாதாரத் துறைப் பணியாளர்கள் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் பொது சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நிபா வைரஸ் தீவிரம் காரணமாக தமிழக - கேரள எல்லைப்பகுதிகளில் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் உறுதியாகவில்லை. இருப்பினும், மக்கள் பொது இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுதியுள்ளனர். பொது இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து செல்வதன் மூலமாக தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்.
Read more: அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் புதிய XEC மாறுபாடு..!! 27 நாடுகளில் பரவியது.. அறிகுறிகள் என்னென்ன?