நிபா வைரஸ்!. சிறுவன் பலி எதிரொலி!. கேரளா விரைந்த மத்திய சுகாதாரக் குழு!
Nipah virus: நிபா வைரஸால் 14 வயது மாணவன் உயிரிழந்ததையடுத்து மத்திய சுகாதாரக்குழு கேரளாவில் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியை சேர்ந்த அஷ்மில் (14) என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தான். மாணவன் உயிரிழந்ததை தொடர்ந்து மலப்புரம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அஷ்மில் அனுமதிக்கப்பட்ட கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அஷ்மிலின் வீடு உள்ள பாண்டிக்காடு பஞ்சாயத்து மற்றும் படித்த பள்ளி உள்ள ஆனக்கயம் பஞ்சாயத்து பகுதிகளில் பேரிடர் தடுப்பு மற்றும் பொதுமக்கள் சுகாதார சட்டத்தின்படி தீவிர கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் வினோத் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே அஷ்மிலுடன் தொடர்பில் இருந்த மேலும் 2 சிறுவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களும், அவர்களது பெற்றோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அஷ்மில் சிகிச்சை பெற்ற 4 மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 246 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 63 பேருக்கு அஷ்மிலுடன் நேரடி தொடர்பு இருந்துள்ளது. இவர்களது ரத்தம், உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே நிபா அறிகுறிகளுடன் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை கேரள அரசுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. மரணமடைந்த சிறுவனுடன் 12 நாள் முன்பு வரை தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் மோனோகுளோனல் என்ற ஆன்டிபயாடிக் மருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய சுகாதாரக் குழுவும் கேரளாவுக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்குழு நோய் பாதித்த பகுதிகளுக்கு சென்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அறிவுரைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.
Readmore: நீங்கதான் சென்னைக்கு அட்ரஸ்னா.. அப்போ நாங்க யாருடா!! – ரஞ்சித் பேச்சுக்கு மோகன் ஜி பதிலடி!!