பயம் காட்டும் நிஃபா வைரஸ்..!! மாரடைப்பால் சிறுவன் மரணம்..!! எச்சரிக்கும் சுகாதாரத்துறை..!!
கேரள மாநிலம் மலப்புரம் அருகே 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சிறுவனுக்கு நிஃபா காய்ச்சல் அறிகுறி தெரியவந்தது. இதையடுத்து, சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.
சிறுவனுக்கு தொடர் சிகிச்சை தரப்பட்ட நிலையில், காலை 10.50 அளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் 11.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். சிறுவனுடன் தொடர்பில் இருந்ததாக 246 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும், அதில் 63 பேர் தொற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிஃபா பாதிப்பின் அறிகுறிகள் உள்ள 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் சுவாச நோய்த்தொற்று ஆகியவை நிபா வைரஸின் அறிகுறிகளாகும். நோய் தீவிரமடையும் போது, வலிப்பு ஏற்படலாம் என்றும் அது தொடரும் பட்சத்தில் மூளை வீக்கம் ஏற்பட்டு நோயாளி கோமா நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி இதுவரை கண்டறியப்படவில்லை என்பதாலும், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் பரவும் என்பதாலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரள எல்லையோரம் உள்ள தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ள தமிழ்நாடு அரசு, நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
நிபா தொற்று அறிகுறி உள்ள நோயாளிகளை உடனடியாக கண்டறிந்து உரிய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையின் முடிவுகளை சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடும் போது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும் என்றும் கிணறுகள், குகைகள், தோட்டங்கள், இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Read More : கேஆர்எஸ் அணையில் இருந்து சீறிப்பாய்ந்தது வரும் காவிரி நீர்..!! 77,000 கனஅடி நீர் திறப்பு..!!