காலிஸ்தான் அமைப்பிடம் நிதி பெற்றாரா? - கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை!
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பிடமிருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ., விசாரணை நடத்த துணை நிலை கவர்னர் பரிந்துரை செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான முறைகேடு செய்ததாக கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. ஆம் ஆத்மி கட்சியை அழிக்க பாஜக முயல்வதாக அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிதி பெற்றதாக உள்துறை அமைச்சகத்திற்கு உலக இந்து கூட்டமைப்பின் அஷூ மோங்கியா என்பவர் புகார் அளித்திருந்தார்.
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பிடம் இருந்த நிதி பெற்றதாக கூறப்படும் விவகாரத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணை நடத்த பரிந்துரைத்து, துணைநிலை ஆளுநர் சக்சேனா கடிதம் எழுதியுள்ளார்.
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு, துணைநிலை ஆளுநரின் இந்த நடவடிக்கை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.