நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை திட்ட பணி... உரிய காலத்தில் முடிப்பதை உறுதி செய்ய புதிய பிரிவு...!
மிக உயர்ந்த கட்டுமானத் தரம், குறைந்த செலவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை உரிய காலத்தில் முடிப்பதை உறுதி செய்வதற்காக, இந்திய நெடுஞ்சாலை ஆணையம் புதுதில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைமையகத்தில் விரிவான திட்ட அறிக்கை பிரிவை அமைத்துள்ளது.
இது குறித்து மத்திய போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை முழுமையாகக் கண்காணிக்க வல்லுநர்களின் ஆலோசனைகளை இப்பிரிவு வழங்கும். விரிவான திட்ட அறிக்கையை மறு ஆய்வு செய்வதில் ஒரே சீரான தன்மையைக் கொண்டு வரும் வகையில், தரமான, விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக மறு ஆய்வு செய்யப்படுவதை இப்பிரிவு உறுதி செய்யும்.
விரிவான திட்ட அறிக்கை என்பது தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான ஒரு முக்கிய அங்கமாகும், மேலும் இது திட்டம் தொடர்பான பல்வேறு ஆய்வுகள், விசாரணைகள் மற்றும் வடிவமைப்புகளை உள்ளடக்கியது. இந்திய சாலை ஆணையத்தின் விவரக்குறிப்புகள் மற்றும் தரநிலைகளின்படி அனைத்து நெடுஞ்சாலை கூறுகளுக்கும் (நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்புகள்) பல்வேறு அளவுருக்களை இறுதி செய்வதில் விரிவான திட்டப் பகிர்மானப் பிரிவு உதவும்.
இந்த விரிவான திட்ட அறிக்கை பிரிவில் சுமார் 40 வல்லுநர்கள் இடம் பெற்றிருப்பார்கள். இதில் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து, நிலம் கையகப்படுத்துதல், பாலங்கள், சுரங்கப்பாதைகள், புவி தொழில்நுட்பம் ஆகியவற்றின் வல்லுநர்கள், மூத்த நெடுஞ்சாலை வல்லுநர்கள் மற்றும் வன வல்லுநர்கள் இடம் பெறுவார்கள்.