மின் வாரியத்தில் அடுத்து வரப்போகும் அதிரடி மாற்றம்... தொழிற்சங்க தலைவர்கள் அரசுக்கு கடிதம்...!
தமிழக மின் வாரியம், வீடு உள்ளிட்ட அனைத்து இணைப்புகளிலும் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டர் பொருத்தும் பணியை தொடங்கி உள்ளது. மின்வாரியத்தில் மின்சாரத்தை விநியோகம் செய்யப்டும் சாதனங்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசு வாங்குகிறது, சில நிறுவனங்கள், தரமற்ற சாதனங்களை வினியோகம் செய்கின்றன. இதை, ஊழியர்கள் கண்டு கொள்வதில்லை. பல பிரிவு அலுவலகங்களில் மீட்டர் இருந்தாலும், இல்லை என்று கூறி மின் இணைப்பு வழங்க தாமதம் செய்கின்றனர்.
இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க மின் வாரியம், ‘ஆதார்’ எண் போன்று மீட்டர், மின் கம்பம், டிரான்ஸ்பார்மர் ஆகியவற்றுக்கு தலா ஒரு தனித்துவ எண்ணை வழங்க உள்ளது. அதன்படி, மீட்டரில், ‘QR CODE’ ஸ்கேன் குறியீட்டு எண்ணுடன், 16 இலக்கத்தில் மின் வாரியம், தயாரிப்பு நிறுவன குறியீட்டுடன் ஆங்கில எழுத்துக்களும், வரிசை எண்களும் இடம் பெற்று இருக்கும். டிரான்ஸ்பார்மரில், 15 இலக்கு எண்களும், மின் கம்பத்தில், 13 இலக்கத்திலும் எழுத்து, எண்கள் இருக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதேபோல, விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினரும் இதே கோரிக்கையை விடுத்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், மின்வாரியத்துக்கு தொழிற்சங்கங்கள் இன்னொரு கோரிக்கையை விடுத்திருக்கின்றன.இது தொடர்பாக வாரிய தலைமைக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் பொதுச்செயலாளர் சேக்கிழார் ஆகியோர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடிதத்தில்; மின்வாரிய கணக்கீட்டு ஆய்வாளர்கள் 200 பேருக்கு வருவாய் மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கணக்கீட்டு பிரிவில் ஆரம்பக்கட்ட பதவிகளான 7,000 காலிப்பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும், நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. ஏற்கெனவே, கணக்கீட்டாளர்களுக்கு ஆய்வாளர் பதவி வழங்கும்போது மின் கணக்கீட்டு பணியை கூடுதலாக பார்க்கச் சொல்லி நிர்ப்பந்திக்கப்பட்டது. தற்போது வருவாய் மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்கிய பிறகும், கணக்கீட்டுப் பணியை மேற்கொள்ள வேண்டும் என கூறுவது முத்தரப்பு ஒப்பந்தத்துக்கு எதிரானது. எனவே, பதவி உயர்வு தொடர்பான உத்தரவில் கணக்கீட்டு பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பான அறிவுறுத்தலை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.