கிணற்றுக்குள் கட்டப்பட்டு, ஆண்டு முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்கும் அதிசய கோயில்.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐயங்கார்குளம் என்ற ஊரில் அமைந்துள்ளது சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் திருக்கோயில். கிருஷ்ணதேவராயரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பிரபலமான மற்றும் பழமையான திருக்கோயிலாக இது இருந்து வருகிறது. கோயிலின் முன்புறத்தில் மிக உயரமான தூண்களுடன் பக்தர்களை வரவேற்கிறது.
இந்தக் கோயிலின் முன் பக்கத்தில் அமைந்துள்ள குளக்கரையில் வாவிக்கிணறு ஒன்று உள்ளது. கிணற்றுக்குள் ஆழமான படிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண் மண்டபங்கள் பூமிக்கடியில் அமைந்திருப்பதும் மண்டபத்தின் நடுவே வாவிகிணறு அமைந்திருப்பதும் தனி சிறப்பாக உள்ளது. இவ்வாறு அந்த காலத்திலேயே பூமிக்கு அடியில் அருமையான சிற்ப வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட பலநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கோயிலாக இருந்து வருகிறது.
மேலும் கிணற்றில் உள்ள நீர் ஆண்டு முழுவதும் பெருக்கெடுத்து எப்போதும் தண்ணீர் நிரம்பியதாகவே காணப்படுகிறது. சித்ரா பௌர்ணமி நாளன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பல்லக்கில் உற்சவம் வந்து பூமிக்கடியில் இருக்கும் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். இதனாலையே இந்த கிணற்றில் இருக்கும் தண்ணீரை அன்றைய நாள் மட்டும் வெளியேற்றிவிடுகின்றனர்.
அவ்வாறு தண்ணீர் வெளியேற்றும் நேரத்தில் இந்த வாவிகிணற்றில் தண்ணீர் ஊறுவதில்லை. வரதராஜ பெருமாள் உற்சவம் வரும் திருவிழா ஒரு வாரத்திற்கு நடைபெற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஒரு வாரத்திற்குப் பின்பாக தானாகவே தண்ணீர் கிணற்றில் ஊறுவது பக்தர்களால் அதிசயமாக பார்க்கப்பட்டு வருகிறது.