ஜூலை 1 முதல் நடைமுறை.! புதிய குற்றவியல் சட்டங்கள்.! தீவிரவாதம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை.!
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்ட போது இருந்த சட்டங்களான ஐபிசி, இந்திய சாட்சிய சட்டம் 1872 மற்றும் இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்கிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்கிதா மற்றும் பாரதிய சாட்சிய சன்கிதா ஆகிய சட்டங்கள் கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் இந்த சட்டங்களுக்கான மசோதா குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரிட்டிஷ் குற்றவியல் சட்டங்களை அகற்றிவிட்டு அவற்றிற்கு பதிலாக இந்திய தண்டனைச் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் இந்தியா முழுமையான சுதந்திரம் பெறுகிறது என தெரிவித்தார். மேலும் பிரிட்டிஷ் காலத்தில் உள்ள சட்டங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருந்ததாக கூறினார்.
தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் இந்திய குற்றவியல் சட்டங்கள் இன்றைய காலத்தில் பெரும் ஆபத்தாக விளையும் தீவிரவாதம் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு கடுமையான மற்றும் விரைவான தண்டனை வழங்கும் வகையில் இயற்றப்பட்டிருப்பதாக கூறினார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட இந்த சட்டங்கள், நிபுணர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், டிசம்பர் மாதம் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேறியது.
இந்த புதிய சட்டமான பாரதிய நியாய சன்கிதா சட்டத்தின் 113 ஆவது பிரிவில் தீவிரவாதம் தொடர்பாக புதிய விளக்கம் அளிக்கப்பட்டு, அதற்கான தண்டனை பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு எதிராக இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ நடத்தப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் தீவிரமாதமாக கருதப்படும். மேலும் இந்த குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் . அவர்களுக்கு பரவல் வழங்கப்படாது.
இதேபோன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஏற்றப்பட்டுள்ள புதிய சட்டங்கள் வருகின்ற ஜூலை மாதம் 1ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.