விசா திட்டத்தில் மாற்றம் செய்யும் நியூசிலாந்து!
நியூசிலாந்து தனது நாட்டுக்கான வேலைவாய்ப்பு விசா திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு ஏராளமானோர் புலம்பெயர்ந்ததைத் தொடர்ந்து விசா விதிகளைக் கடுமையாக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, திறன் குறைந்த வேலைகளுக்கு ஆங்கிலத்தைக் கட்டாயமாக்குவது, பெரும்பாலான வேலைகளுக்குக் குறைந்தபட்சத் திறன்கள் மற்றும் வேலை அனுபவத்திற்கான வரம்புகளை வகுப்பது போன்ற மாற்றங்களை கொண்டு வர உள்ளது.
மேலும், குறைந்த திறமையான வேலைவாய்ப்புகளுக்கு அதிகபட்ச தொடர்ச்சியான தங்கும் காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படவுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும்1,73,000 பேர் நியூசிலாந்துக்குப் புலம்பெயர்ந்தனர். ஏறக்குறைய 5.1 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட நியூசிலாந்திற்குப் புலம் பெயர்வோர் எண்ணிக்கை, கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் வேகமாக அதிகரித்து வருகிறது.
அந்த நிலவரத்தால் நியூசிலாந்தின் பணவீக்கம் அதிகரித்துவிடுமோ என்ற கவலை அந்நாட்டு அரசாங்கத்துக்குக் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான ஆஸ்திரேலியாவிலும் ஏராளமானோர் குடிபுகுந்துவிட்டனர். அதனால், அடுத்த ஈராண்டுகளுக்கு வெளிநாட்டினர் வேலை நியமன எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கப் போவதாக ஆஸ்திரேலியா ஏற்கெனவே அறிவித்தது