அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு.. அகவிலைப்படி 7% உயர்வு.. மாநில அரசு சொன்ன குட்நியூஸ்...
2025 புத்தாண்டை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு மணிப்பூர் மாநில அரசு மிகப்பெரிய நற்செய்தியை அறிவித்துள்ளது. முதலமைச்சர் என் பிரேன் சிங் தலைமையிலான அரசு, மாநிலத்தின் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
மணிப்பூர் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) ஜனவரி 1, 2025 முதல் 32 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்தார். அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால், அம்மாநிலத்தில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயனடைய உள்ளனர்.
தொடர்ந்து பேசிய பிரேன் சிங் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோவில் கேபின் க்ரூ பதவிகளுக்கு டெல்லியில் சுமார் 500 இளைஞர்களுக்கு குடியிருப்பு திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் அறிவித்தார்.. இன வன்முறையால் இடம்பெயர்ந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, சுற்றுலா அமைச்சகம் பயிற்சிக்கு நிதியளிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஜனவரி 2025 முதல், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பொதுவாக பரிந்துரைக்கப்படும் 23 புற்றுநோய் மருந்துகளை அரசாங்கம் இலவசமாக வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்..
மேலும் பேசிய அவர் “ மாதிரி குடியிருப்புப் பள்ளிகளின் நிர்வாகத்தை மேற்பார்வையிட ஒரு பிரத்யேக சங்கம் நிறுவப்பட்டு, அவற்றின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்யும். இந்த பள்ளிகள் சிறுபான்மை பகுதிகளில் உயர்தர, மலிவு விலையில் கல்வியை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
PMJVK திட்டத்தின் கீழ் 11 மாவட்டங்களில் 13 மாதிரி குடியிருப்புப் பள்ளிகள் கட்டப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் கல்லூரி மாணவர் மறுவாழ்வுத் திட்டம் இடம்பெயர்ந்தவர்களுக்காக மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும். பொறியியல் (ஜேஇஇ) மற்றும் மருத்துவம் (நீட்) ஆகிய தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கான முதலமைச்சரின் பயிற்சித் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த முன்முயற்சி மணிப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் தொழில்முறை படிப்புகளில் சேருவதற்கு அதிகாரம் அளிக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மணிப்பூரில் 30 கோடி திட்ட மதிப்பீட்டில் இபுது மார்ஜிங்கில் கேலரியும், ரூ.25 கோடி மதிப்பீட்டில் லாங்தப்லா கொனுங் மேம்பாடும், 40 கோடி செலவில் மகாராஜா கம்பீர் சிங் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
Read More : மகிழ்ச்சி செய்தி…! 2026-ம் ஆண்டு வரை பயிர் காப்பீடு திட்டம் தொடரும்… மத்திய அரசு ஒப்புதல்…!