MBBS சீட் வழங்குவதில் புது ட்விஸ்ட்!… 2025-26 கல்வியாண்டுக்கு தள்ளிவைப்பு!… தேசிய மருத்துவ ஆணையம்!
மக்கள் தொகை அடிப்படையில் MBBS இடங்களுக்கு அனுமதி வழங்கும் புதிய நடைமுறை வரும் 2025-26 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கும் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி அவசியம். அதற்காக ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்து வருகின்றன. இந்தநிலையில் எம்பிபிஎஸ் இடங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய நெறிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் அண்மையில் வெளியிட்டது. அதில் அதிகபட்சம் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மட்டுமே இனிமேல் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் வீதம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களும் எதிரிப்பு தெரிவித்தன. கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே புதிய விதிகளை மறு ஆய்வுக்கு உட்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை சார்பிலும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணைய இளநிலை மருத்துவ கல்வி வாரியத்தின் தலைவர் அருணா வானிக்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்களை அனுமதிக்கும் புதிய வழிகாட்டி விதிமுறைகள் வரும் 2025-26 ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.