"கூலிப்படைக் கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!!" - கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை முன் விரோதத்தால் நடந்ததாக காவல்துறை கூறியிருந்தாலும் கூலிப்படை காரணமாகவே நடந்துள்ளது எனவும், கூலிப்படைக் கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், என புதியதமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர், நேற்றிரவு அவரது வீட்டருகே ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல வந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் அவரை சூழ்ந்து வெட்டி சாய்த்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்தார்.
இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ரங்கை அவரது ஆதரவாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டர். இதற்கு பழி தீர்க்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்ததாக பாலா தெரிவித்துள்ளார். இப்படியாக பழிக்குப் பழி கொலை சம்பவங்களால் தலைநகர் சென்னை மீண்டும் கிரைம் நகரமாக மாறி இருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர் சென்னை வாசிகள். தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அரசு பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. உடலுக்கு வழக்கறிஞர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி கூறுகையில், "பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் படுகொலை சம்பவம் வேதனைக்குரியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை முன் விரோதத்தால் நடந்ததாக காவல்துறை கூறியிருந்தாலும் கூலிப்படை காரணமாகவே அந்தக் கொலை நடந்துள்ளது. அண்மை காலமாக தொடர்ந்து கூலிப்படையால் கொலைகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கூலிப்படையின் வேர் எங்கிருந்து வருகிறது என்று கண்டறிந்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும்.
காவல்துறை நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது அரசியல் அழுத்தம் காரணமாக இருக்கிறதா என்ற கேள்வியின் எழுகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்கள் தான் கூலிப்படை உருவாகும் இடங்களாக உள்ளது. கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆதரவாக அரசியல் அமைப்புகள் செயல்படுவதால் தான் பொதுமக்கள் அச்சப்படும் நிலை உருவாகி வருகிறது. கூலிப்படையினர் யாராக இருந்தாலும் அவர்களை வேரோடு அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
Read more | கடலூர் சம்பவம்… தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது…!