விரைவில் OTT ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு புதிய விதிமுறைகள்...! மத்திய அரசு ஆலோசனை
OTT ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. விழா குறித்து பேசிய மத்திய அமைச்சர் எல.முருகன் இந்தியாவின் சிறந்த முதல்முறை இயக்குனர் விருது இந்த ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். திரைப்பட விழாவில் நாடு முழுவதிலும் இருந்து 400 திரைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்தார். இந்த ஆண்டு திரைப்பட விழாவில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்கும் வகையில் திரையரங்குகளின் இருக்கைகள் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் பிலிப் நோயிஸுக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த நாட்டிலிருந்து தயாரிப்பாளர்கள் , இயக்குநர்கள் உட்பட 40 திரை ஆளுமைகள் விழாவில் பங்கேற்க உள்ளனர். திரைப்பட விழாவின் தொடக்க திரைப்படமாக ஆஸ்திரேலியாவின் பெட்டர் மேன் திரையிடப்படும் என்றார். முன்னதாக, தென்னிந்திய திரைப்பட சங்க பிரதிநிதிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார், அங்கு கோவாவில் நடைபெற உள்ள 55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா பற்றி பேசினார். இயக்குநர் செல்வமணி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; OTT இயங்குதளங்களின் பெருக்கம் மற்றும் அனைத்து வயதினருக்கும், குறிப்பாக சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் தடையற்ற அணுகல், ஒரு பிரிவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது, அவர்கள் தளங்களில் நடத்தை நெறிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கோருகின்றனர். OTT தளங்களுக்கு தணிக்கைக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை சேகரித்து வருகிறது. இந்த ஆலோசனைகளின் முடிவுகளின் அடிப்படையில், சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.