புதிய ரெக்கார்டு!… தோனியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த ஜடேஜா!
Jadeja: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐபிஎல் வரலாற்றிலேயே தோனியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்து ரவீந்திர ஜடேஜா சாதனை படைத்துள்ளார்.
தரம்சாலாவில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 53ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.
சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த டேரில் மிட்செல் மற்றும் கெய்க்வாட் இருவரும் ஓரளவு தாக்குபிடித்து ரன்கள் எடுத்தனர். எனினும் கெய்க்வாட் 32, மிட்செல் 30, மொயீன் அலி 17, மிட்செல் சான்ட்னர் 11, ஷர்துல் தாக்கூர் 17 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக ரிச்சர்டு கிளீசன் 2 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 167 ரன்கள் எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் பஞ்சாப் அணியில் ராகுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் பிராப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், துஷார் தேஷ்பாண்டே வீசிய போட்டியின் 2ஆவது ஓவரில் பேர்ஸ்டோவ் 7 ரன்கள் மற்றும் ரிலீ ரோஸோவ் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷஷாங்க் சிங் 27 ரன்னில் ஆட்டமிழக்க, பிராப்சிம்ரன் சிங் 30 ரன்னில் வெளியேறினார்.
சாம் கரண் 7 ரன்னிலும், அஷுதோஷ் சர்மா 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் கைப்பற்றினார். துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் சிஎஸ்கே அணிக்காக அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற தோனி சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார். தோனி 15 முறை ஆட்டநாயகன் விருதை வென்று முதல் இடத்தில் இருந்தார். தற்போது அதனை முறியடித்து ஜடேஜா (16 முறை) முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்தப்படியாக ரெய்னா 12 முறையும் ருதுராஜ் 11 முறையும் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: தீவிரவாதிகளுக்கு உதவிய 6 பேர் கைது!… தொடரும் பதற்றம்!…