அமலுக்கு வருகிறது புதிய பிளாஸ்டிக் மேலாண்மை விதிமுறைகள்!
இந்தியாவில் 2025 ஆம் நிதியாண்டு முதல் புதிய பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் அமலுக்கு வருகின்றன. இதன்படி பிளாஸ்டிக்கை மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு செய்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த விதிமுறைகளை உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் பிளாஸ்டிக் பேக்கேஜிங் பிராண்ட் உரிமையாளர்கள் இனி கட்டாயம் இதனை பின்பற்ற வேண்டும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இதில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
அரசின் பிளாஸ்டிக் மேலாண்மை விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்து கோடக் செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, " இந்தியாவில் நுகர்வோரிடம் நேரடியாக பொருட்களை கொண்டு சேர்க்கும் நிறுவனங்கள் தங்களது வருவாயில் சராசரியாக 5 முதல் 8 சதவிகிதத்தை பேக்கேஜிங்கிற்காகவே செலவிடுகின்றன.
இதனால் பிரிட்டானியா, கோல்கேட் மற்றும் நெஸ்லே ஆகியவை மிகவும் பாதிக்கப்படும்" என தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் , வெளிப்படையான பிளாஸ்டிக், உணவு தரத்திற்கான பிளாஸ்டிக். நெகிழ்வு தன்மை கொண்ட பிளாஸ்டிக் மற்றும் பல அடுக்கு பிளாஸ்டிக் என ஐந்து வகைகளில் பிளாஸ்டிக்கை பிரித்து பகுப்பாய்வு செய்ததாக கோடக் தரகு நிறுவனம் கூறுகிறது.
அதனைத்தொடர்ந்து, நெஸ்ட்லே இந்தியா தங்களது அனைத்து விளம்பர பொருட்களுக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை 2020 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்திவிட்டது என்றும் பேக்கேஜிங்கில் முக்கிய கவனம் செலுத்துவதாகவும் அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
பேக்கேஜிங்கில் பிளாஸ்டிக்கின் அளவை குறைப்பது அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் முயற்சிகளை தாங்கள் எப்போது தொடங்கி விட்டோம் என நெஸ்ட்லே கூறியுள்ளது.எளிதில் மறுசுழற்சி செய்யக்கூடிய பேக்கேஜிங் பொருளை நோக்கி தங்களது நிறுவனம் படிப்படியாக நகர்ந்து வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசின் புதிய பிளாஸ்டிக் மேலாண்மை திட்டத்தின் மூலம் பலனடைய போவது பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிலில் ஈடுபட்டுள்ள கணேசா எக்கோஸ்பியர், ஈபிஎல், யுஃபிளெக்ஸ் மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்கள் தான் என தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.