புதிய நிலச்சரிவு..! அவசரமாக 7,900 மக்களை வெளியேற்றும் அதிகாரிகள்..! பதற்றத்தில் பப்புவா நியூ கினியா..!
தென் மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள காகலம் மலை கிராமத்தில் மே 24ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் சிக்கினர். 1200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின. கிராமத்திற்கு செல்லும் சாலையும் பாதிக்கப்பட்டதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதாக ஐ.நா., கூறியுள்ளது.
மேலும் இந்த நிலச்சரிவில், சிக்கியவர்களின் உடல்கள் 20 முதல் 26 அடி ஆழ இடிபாடுகளிலில் சிக்கி இருப்பதால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகிறது. நிலச்சரிவு தொடர்ந்து மெதுவாக நிகழ்ந்து கொண்டிருப்பதால் நிலைமை இன்னும் சீராகவில்லை. அதனால் மீட்புக் குழுக்களுக்கும் ஆபத்தான சூழலே நிலவுகிறது. வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இனி நிலச்சரிவில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது. கட்டடங்கள், விவசாய தோட்டங்கள் அழிந்தததின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என பப்புவா நியூ கினியா பேரிடர் மீட்புக் குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பப்புவா நியூ கினியா மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சத்தால், ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள கிராமங்களில் இருந்து ஏறக்குறைய 7,900 குடியிருப்பாளர்களை மாகாண அதிகாரிகள் அவசரமாக வெளியேற்றுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாறைகள் மற்றும் நிலப்பரப்புகளின் ஆபத்து நிறைந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் வெளியேற்ற முயற்சிக்கிறோம், ஒவ்வொரு மணி நேரமும் பாறை உடைவதை நீங்கள் கேட்கலாம் - இது வெடிகுண்டு அல்லது துப்பாக்கிச் சூடு போன்ற சத்துடன் இருக்கிறது, மேலும் இதன் காரணமாக பாறைகள் கீழே விழுகின்றன" என்று அவர் கூறினார்.