சென்னை உட்பட 8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்!. மத்திய அரசு!
Chief Justices: சென்னை உட்பட 8 உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு சனிக்கிழமை (செப்டம்பர் 21) வெளியிட்டுள்ளது.
டெல்லி, ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக், மத்தியப் பிரதேசம், கேரளா, மேகாலயா மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதிகளின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இது குறித்து சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி மன்மோகன், டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் ஷக்தர் ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கைத் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பிரசன்னா முகர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி நிதின் மதுகர் ஜம்தார் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி தஷி ரபஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் கல்பனா ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர, இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எஸ்.ராமச்சந்திர ராவ், ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Readmore: சென்னையில் மாஸ் காட்டிய ரிஷப் பந்த்!. தோனியின் சாதனையை சமன் செய்து அசத்தல்!.