For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கேவி தங்கபாலு, ரூபி மனோகரன் 89 லட்சம் கடன் தரணும்..! வெளிவந்த இரண்டாவது கடிதம்..!

04:14 PM May 05, 2024 IST | Mari Thangam
கேவி தங்கபாலு  ரூபி மனோகரன் 89 லட்சம் கடன் தரணும்    வெளிவந்த இரண்டாவது கடிதம்
Advertisement

 மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய 2வது கடிதம் குறித்து நெல்லை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் மாயமான நிலையில், தனது தந்தையை காணவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதற்கிடையே, பாதி எரிந்த நிலையில் கரைச்சுற்றுப்புதூரில் உள்ள தோட்டத்தில் சடலமாக ஜெயக்குமார் நேற்று மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த ஜெயக்குமார் ஏற்கனவே, தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் கேவி.தங்கபாலு பெயர்களை குறிப்பிட்டிருந்ததும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகார் கடிதத்தை அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் எழுதிய இரண்டாவது கடிதம் தற்போது கிடைத்துள்ளது. தனது மருமகள் ஜெபாவிற்கு ஜெயக்குமார் எழுதிய கடைசி கடிதம் ஆன இந்த கடிதத்தில் அவர் யார் யாரிடம் எவ்வளவு பணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று ரூபி மனோகரன், தங்கபாலு ஆகிய இருவரும் முதல் கடிதத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இன்று வெளியான இரண்டாவது கடிதத்திலும் அவர்கள் இருவரும் மீதும் ஜெயக்குமார் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் 78 லட்சம், கேவி தங்கபாலு ரூபி மனோகரனிடம் வாங்கிக் கொள்ளச் சொன்ன 11 லட்சம் என மொத்தம் 89 லட்சத்தை வழக்கு தொடர்ந்து பெற வேண்டும், சி.சி.எம் பள்ளி நிர்வாகியிடம் 30 லட்சத்தை நான்கு வருட வட்டியோடு வசூல் செய்ய வேண்டும், ஆனந்தராஜா என்பவரிடம் 46 லட்சத்திற்கு வட்டியோடு வசூல் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு நெல்லை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர். அதில் கடிதத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடியும் வரை தற்கொலையா என்பதை உறுதியாக கூற முடியாது. ஜெயக்குமாரின் மகன் கொடுத்த புகாரின் படி, காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டதால், மர்ம மரணம் என தற்போது வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது எனவும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement