NEET UG 2024!… கட்-ஆஃப்கள், கருணை மதிப்பெண்கள்!… என்டிஏ விளக்கம்!
NEET UG 2024: நீட் தேர்வுக்கு முன்பாக, வட மாநிலங்களில் வினாத்தாள் வெளியாகி முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது குறித்து தேசியத் தேர்வுகள் முகமை (NTA) விளக்கமளித்துள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்வை எழுத 24,06,079 பேர் விண்ணப்பித்து, 23,33,297 பேர் எழுதினர். தமிழகத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இதில், மொத்தம் 13 லட்சத்து 16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% பேர் தேர்ச்சி அடைந்தனர். இது கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும்.
அதேபோல வரலாற்றில் முதல் முறையாக 67 மாணவர்கள், முழுமையான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 8 பேர் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில், தேர்வு முடிவுகளிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதாவது, மேலும், நீட் தேர்வில் முதலிடம் பெற்ற 6 தேர்வர்கள் மற்றும் அதற்கு அடுத்தடுத்த இடங்கள் பெற்ற இருவரின் பதிவு எண்கள் அடுத்தடுத்த வரிசை எண்களில் உள்ளது. இது சந்தேகத்தைக் கிளப்பி உள்ளது. நீட் தேர்வுக்கு முன்பாக, வட மாநிலங்களில் வினாத்தாள் வெளியாகி முறைகேடு நடைபெற்றதாகக் கடும் சர்ச்சை எழுந்த நிலையில், பிஹார் காவல்துறையினர் 13 பேரைக் கைது செய்தனர். இதுகுறித்து தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் நீட் தேர்வு மதிப்பெண்களில் கருணை மதிப்பெண்கள் வழங்கியதே, தேர்வர்களுக்கு 718, 719 என மதிப்பெண்கள் வந்ததற்காக காரணம் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதுகுறித்து முகமை கூறும்போது, ’’உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 13.06.2018-ன் படி, கருணை மதிப்பெண்கள் சில மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. தேர்வு மையத்தில் நேரப் பற்றாக்குறை ஏற்பட்டது குறித்து, மாணவர்கள் தேசியத் தேர்வுகள் முகமையிடம் முறையிட்டதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் சிலருக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதனால் சிலரின் மதிப்பெண்கள் 718 அல்லது 719 என இருக்கலாம்’’ என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. எனினும் கருணை மதிப்பெண்களுக்கு எப்போது, யாரெல்லாம் விண்ணப்பித்தனர் என்ற விவரங்கள் எதையும் தேசிய தேர்வு முகமை வெளியிடவில்லை.
Readmore: விதிமுறைகளை மீறிய ஐசிஐசிஐ வங்கி!… செபி எச்சரிக்கை!