நீட் தேர்வு முறைகேடு..!! தொடர்ந்து அனுமதி மறுத்த சபாநாயகர்..!! கூண்டோடு வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்..!!
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மக்களவை எதிர்க்கட்சி எம்.பிக்கள் அனைவரும் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர்.
18-வது லோக்சபா கூட்டத்தொடரின் 6-வது நாளான இன்று டி 20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா வாசித்தார். இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி தரவில்லை. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர், தாம் மைக் இணைப்பை துண்டிக்கவில்லை. தம்மிடம் அந்த சுவிட்ச் இல்லை என்றார..
இதனைத் தொடர்ந்தும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறோம். நாடாளுமன்றதுக்கு நீட் விவகாரமும் முக்கியம் என்ற செய்தியை மாணவர்களுக்கு சொல்ல வேண்டும். ஆகையால்தான் நீட் முறைகேடுகள் குறித்து ஒருநாள் விவாதிக்க வேண்டும் என்கிறோம்” என்றார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ”ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பின்னரே எந்த விவாதமும் நடத்தப்பட வேண்டும்” என்றார். அப்போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து நீட் முறைகேடுகள் குறித்து விவாதிக்க கோரினர். ஆனாலும், சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நீட் தேர்வு முறைகேடுகள் உள்ளிட்டவைகளைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இதில் திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர்.
Read More : மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பணியிட மாற்றம்..!! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!