”நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது”..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இதன், ரிசல்ட் வெளியான நிலையில், பல சர்ச்சைகள் வெடித்தன. அதாவது, நீட் தேர்வுக்கு முன்பே, பீகாரில் வினாத்தாள் கசிந்த நிலையில், மாணவ-மாணவிகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என தொடர்ந்து முறைகேடு புகார்கள் வந்தன. இதனால் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. ஆனால், தேர்வு ரத்து செய்யப்படவில்லை.
உச்சநீதிமன்ற விசாரணையிலும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதியானது. வினாத்தாள் கசிந்ததை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டது. அதேவேளையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட், நீட் முறைகேடுகள் நாடு முழுவதும் நடைபெற்றது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தினால் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என தெரிவித்தது. மேலும் மாநிலங்கள், தேர்வு மையங்கள் வாரியாக ரிசல்ட் வெளியிட உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பாட்னா மற்றும் ஹசாரியாக் ஆகிய பகுதிகளில் உள்ள மையங்களில் மட்டும் தான் நடந்துள்ளது. இதனால் மொத்த தேர்வையும் ரத்து செய்வது சரியாக இருக்காது. நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடுதல் கவனம் தேவை, சைபர் செக்யூரிட்டி பயன்படுத்த வேண்டும். எனவே, தேர்வு முறையில் உள்ள முறைகேடுகளை நிபுணர் குழு அமைத்து சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
Read More : நீலகிரிக்கு ரெட் அலர்ட்..!! அவசர அவசரமாக விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு..!!