HARIYANA | நம்பிக்கை வாக்கெடுப்பில் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு வெற்றி.!
ஹரியானா மாநிலத்தின் புதிய முதல்வர் நயாப் சிங் சைனி புதன்கிழமை மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற்றார். முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது கேபினட் அமைச்சர்களுடன் நேற்று ராஜினாமா செய்ததை தொடர்ந்து நயாப் சிங் சைனி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஹரியானா மாநில சட்டப்பேரவையில் இரண்டு மணி நேரம் விவாதம் நடந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஜனநாயக ஜனதா கட்சி தனது 10 எம்எல்ஏக்களையும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற உத்தரவிட்டிருந்தது. எனினும் வாக்கெடுப்பு நேரத்தில் அந்தக் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஹரியானா பாஜக தலைவராக இருக்கும் சைனி, தனக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி 48 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா மாநில சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 40 எம்எல்ஏக்கள் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 30 எம்எல்ஏக்களும் ஜேஜேபி கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி தனது 40 எம்எல்ஏக்களுடன் 6 சுயேட்சை எம்எல்ஏக்கள் மற்றும் ஹரியானா லோகித் கட்சி எம்எல்ஏ கோபால் கண்டா ஆகியோரின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறது.
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், ஜே.ஜே.பி உடனான பாஜகவின் கூட்டணி கிட்டத்தட்ட முறிந்துவிட்டது. அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கட்டார் மற்றும் அவரது அமைச்சரவை செய்த பணிகளுக்கு நன்றி கூறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தற்போதைய முதல்வர் சைனி தெரிவித்துள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பிற்கு நான் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்திருக்கிறார் சைனி. மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் "புதிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்" என்று அவர் கூறினார்.