நவராத்திரி 9ம் நாள்!. சரஸ்வதி, ஆயுத பூஜை நாளில் அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள்!.
Navratri 9th day: நவராத்திரி விழாவின் நிறைவு நாளாக 9ம் நாள் வழிபாடு அமைந்துள்ளது. இந்த நாளில் அம்பிகையை நாம் பரமேஸ்வரி என்ற திருநாமத்தால் வழிபாடு செய்கிறோம். பரமனின் நாயகி, பரமனின் ஈஸ்வரி என்பதனால் அம்பிகையை நாம் பரமேஸ்வரி என்கிறோம். இந்த அம்பிகை தைரியம், வீரம், ஆற்றல் போன்ற அத்தனையையும் நமக்கு அருளக் கூடியவளாக இந்த தேவி அமைகிறாள்.
அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமமும் இந்த தேவிக்கு உண்டு. அதனால் தான் பலரின் குலதெய்வமாகவும் இந்த அங்காள பரமேஸ்வரி விளங்குகிறாள். அனைத்து விதமான நலன்களையும் தரக்கூடிய இந்த தேவி எழுந்தருளி அருள் புரியும் நாளாக நவராத்திரியின் இறுதி நாள் அமைகிறது.
கோயில்களில் பூஜைகள் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல கோயில்களில் அம்பாள் உக்கிரமாக ஆகி இருந்தாள். அந்த கால கட்டத்தில் ஆதிசங்கரர் ஒவ்வொரு நாளும் ஒரு கோயிலுக்கு சென்று ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்து, அம்பாளை சாந்தப்படுத்தி வந்தார். ஆதிசங்கரர் ஸ்தல யாத்திரை மேற்கொண்டிருந்த அந்த சமயத்தில், மண்டன மிஷ்ரர் என்ற ஒருவருடன் ஆதிசங்கருக்கு வாதம் ஏற்படுகிறது. இந்த வாதத்தில் யார் வெற்றி பெற்றவர் என்பதை முடிவு செய்ய நீதிபதியாக, அனைத்து சாஸ்திரங்களும் அறிந்த, சரஸ்வதியின் சொரூபமான மண்டன மிஷ்ரரி மனைவியை அமர வைக்கிறார்கள். அவளுக்கு பெயர் சரசவாணி என்பதாகும்.
ஆயக்கலைகள் 64 என்று சொல்லப்படுவதில் ஒன்று தர்க்க சாஸ்திரம். இதன் படி ஆதிசங்கரருக்கும், மண்டனமிஷ்ரருக்கும் வாதம் நடக்கிறது. வாதம் துவங்குவதற்கு முன் இருவரின் கழுத்திலும் மாலை ஒன்று போடப்படுகிறது. இதில் யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோல்வி அடைந்தவர் என சொல்லி வாதத்தை துவக்கி வைக்கிறாள் சரசவாணி. இருவரும் மாறி, மாறி கேள்வி கேட்கிறார்கள், பதில் சொல்கிறார்கள். இதில் ஆதிசங்கரர் கேட்ட பல கேள்விகளுக்கு மண்டனமிஷ்ரரிடம் பதில் இல்லை. அவரது மாலை கொஞ்சம், கொஞ்சமாக வாட துவங்கியது. ஒரு கட்டத்தில் ஆதிசங்கரர் வெற்றி பெறும் நிலை வருகிறது.
அப்போது சரசவாணி, ஆதிசங்கரர் வெற்றி பெற இன்னும் கால அவகாசம் உள்ளது. அவர் முழுவதுமாக வெற்றி பெற என்னையும் வெற்றி கொள்ள வேண்டும். ஏனென்றால், மண்டனமிஷ்ரர் சம்சாரி. அவரில் பாதி நான். அவருள் நானும் அடக்கம். அதனால் என்னையும் வெற்றி கொள்ள வேண்டும் என்றார். இதை ஏற்று ஆதிசங்கரரும் வாதத்தை தொடர்ந்தார். என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொன்னார். இதனால் ஒரு கட்டத்தில் மிரண்டு போன சரசவாணி, எதை பற்றி கேள்வி கேட்டால் ஆதிசங்கரரால் பதிலளிக்க முடியாது என யோசித்தாள். சங்கரர் சிறு வயதிலேயே சன்னியாசம் மேற்கொண்டவர். அதனால் சம்சார பந்தம் பற்றி அவரிடம் கேள்வி கேட்கிறாள்.
ஆதிசங்கரர் பதிலளிக்க முடியாமல் நின்று போகிறார். அவர் என்ன பதில் சொல்ல போகிறார் என அனைவரும் ஆர்வமாக பார்க்க, ஆதிசங்கரரோ இந்த கேள்விக்கு பதிலளிக்க எனக்கு சிறிது அவகாசம் வேண்டும் என்று கேட்கிறார். கொடுக்கப்பட்ட அவகாசத்தில் கூடு விட்டு கூடு பாயும் சக்தி மூலம் மண்டமிஷ்ரரின் உடலுக்குள் சென்று சம்சாரம் பற்றி அறிந்து கொண்டு வந்து, சரசவாணியின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். விவாதத்தில் வெற்றியும் பெறுகிறார். அப்படி ஆதிசங்கரர், சரஸ்வதி தேவியின் பரிபூரண அருளுடன் வாதத்தில் வெற்றி பெற இடம் தான் ஸ்ரிங்கேரி சாராத பீடமாக திகழ்கிறது. அன்னை கலைவாணியின் மறு வடிவமாக சாரதா தேவி, சக்திபீடத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
இன்றைய தினம் தாமரை வடிவத்தினாலான கோலங்களை நாம் போட வேண்டும். நல்ல வாசனைப் பொடிகளைக் கொண்டு இந்த கோலத்தை போட வேண்டும். ஆயுத வடிவிலான கோலங்களையும் நாம் போடலாம். மலர் வகையில் தாமரை மலர் கொண்டும், இலை வகையில் மரிக்கொழுந்து இலைகளைக் கொண்டு அம்மனை அர்ச்சனை செய்து வழிபடலாம்.
நெய்வேத்யமாக சர்க்கரைப் பொங்கல், கொண்டைக் கடலை சுண்டல், பழ வகையில் நாவல் பழம் வைத்து வழிபடலாம். வசந்தா ராகத்தில் அமைந்த பாடல்களை பாடி அம்பாளை வழிபாடு செய்யலாம். அம்பாளுக்கு உரிய நிறமாக வெந்தய நிறம் அமைந்துள்ளது. நவராத்திரி என்பதனால் மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்து வழிபட்டால் அது விசேஷ பலன்களை தரும். இன்றைய நாளில் அம்பாளை வழிபட்டால் எண்ணியது ஈடேறும். அதாவது நினைத்த காரியம், நினைத்தபடி நடக்கும். நமது எண்ணத்துடைய முழு பலனையும் அம்பாள் நமக்கு அருள்வாள்.
Readmore: இந்தியன்-2 பட பாணியில் லஞ்சம் வாங்கிய மனைவியை வீடியோ எடுத்து மாட்டி விட்ட கணவன்..!!