நவராத்திரி 3ம் நாள்!. வராகி அம்மனை வழிபடுங்கள்!. பகை, கடன் தொல்லை தீரும்!
Navratri 3rd day: இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் நவராத்திரி(Navratri) பண்டிகையும் ஒன்றாகும். நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். ஒன்பது நாட்கள் கொண்டாடும் பண்டிகை ஆகும். நவம் என்பதற்கு ஒன்பது என்று பொருள் ஆகும்.
ஒரு மனிதனின் வாழ்விற்கு அவனை வழிநடத்தும் கல்வி, எந்த சிக்கலையும் தாங்குவதற்கான மன வலிமையையும், உடல் வலிமையையும் அளிக்கும் வீரம், செழிப்புடன் வாழ்வதற்கான செல்வத்தை தரும் கல்வி, வீரம், செல்வம் ஆகியவற்றை தரும் முப்பெரும் தேவிகளை இந்த நவராத்திரியில் வழிபடுகிறோம்.
துர்கா தேவி, லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவி ஆகிய மூன்று தேவிகளும் சேர்ந்து மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை வதம் செய்ததே நவராத்திரி ஆகும், 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவை மூன்று, மூன்று நாட்களாக பிரித்து 3 தேவிகளுக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்காதேவிக்காக வழிபாடு நடத்தப்படுகிறது.
இந்த 3 நாட்களும் துர்காதேவியின் ஆட்சிக்காலம் ஆகும், இதில் துர்காதேவிக்கு வழிபாடு செய்யப்படுகிறது. வீரத்தை அளிப்பதற்காக இந்த நாட்களில் பூஜைகள் நடத்தப்படுகிறது. அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவிக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. செல்வத்தை தரும் லட்சுமி தேவியின் ஆட்சிக்காலம் இதுவாகும். கடைசி 3 நாட்கள் கல்விச்செல்வத்தின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கான வழிபாடு செய்யப்படுகிறது.
நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்கியது. வரும் அக்டோபர் 12-ந் தேதி விஜயதசமி கொண்டாட்டத்துடன் நவராத்திரி விழா முடிவடைகிறது. இந்த 9 நாட்களில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாட்களும் வீடுகளில் கொலு பண்டிகை நடத்தப்படுகிறது. அதாவது, ஏராளமான பொம்மைகளை வீடுகளில் வைத்து அலங்கரித்து பெண்கள் சேர்ந்து பூஜை செய்வார்கள்.
நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை உமா மகேஸ்வரியாகவும், 2வது நாளில் ராஜ ராஜேஸ்வரியாகவும் அலங்கரித்து வழிபட்டோம். இதைத் தொடர்ந்து நவராத்திரியின் 3 ம் நாளில் அன்னையை வாராகி அல்லது வராகி அம்மனாக அலங்கரித்து வழிபட வேண்டும். பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வராகி தேவி. இவள், பராசக்தியின் போர் படைக்கு தலைமை தாங்கி, வெற்றியை பெற துணையாக நின்றவள் ஆவாள். அதனால் நவராத்திரி வழிபாட்டில் வராகி அம்மனுக்கு முக்கிய இடம் உண்டு.
நவராத்திரியின் 3 ம் நாளில் மலர் வகை கோலம் இட்டு, அம்பிகையை எழுந்தருளச் செய்ய வேண்டும். மலர்களில் சம்பங்கியும், இலைகளில் துளசியும் கொண்டு அம்பிகையை அர்ச்சிக்க வேண்டும். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கலும், சுண்டல் வகையில் காராமணி சுண்டலும், பழ வகைகளில் பலாப்பழமும் அம்பிகைக்கு படைக்க வேண்டும். நவராத்திரியின் 3 ம் நாளில் அம்பிகையை நீல நிற வஸ்திரத்தால் அலங்கரிக்க வேண்டும். நாமும் நீல நிறத்தில் உடை அணிந்து கொள்ளலாம். பொதுவாகவே நீற நிறம் என்பது வெற்றியின் அடையாளமாக கருதப்படுவதாகும். இந்த நாளில் காம்போதி ராகத்தில் அமைந்த பாடல்களை பாடி அம்பிகையை துதிக்க வேண்டும்.
நவதுர்க்கைகளில் 3 ம் நாளுக்குரிய தேவியான சந்திரகாண்டாவையும் வழிபடுவது சிறப்பானது. புலியை வானமாக கொண்ட இந்த தேவி, தலையில் பிறையை சூடியவளாக, எட்டு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். எட்டு கைகளிலும் பல விதமான ஆயுதங்களை ஏந்தியவளாக இருக்கும் இந்த திருக்கோலம் வீரம் மற்றும் தைரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. சந்திரகாண்டா தேவி, தன்னுடைய பக்தர்களை எந்த விதமான தீமையும் நெருங்க விடாமல் காக்கக் கூடியவள். நவராத்திரியின் 3 ம் நாளில் அம்பிகையை வராகி ரூபத்தில் வழிபட்டால் பகை அழியும், கடன் தொல்லை தீரும், மன அமைதி, மனத்தெளிவு ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.