பட்லர், பாட் கம்மின்ஸ் எந்த பள்ளியில் ஹிந்தி படித்தார்கள்? நடராஜனுக்கு திமுக நிர்வாகி கேள்வி..!!
ஐபிஎல் தொடரில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் ஆவார். கடந்த 2024 ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக நடராஜன் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். நடராஜன் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என சொல்லப்பட்டாலும் பவர்பிளே ஓவர்கள், மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என கேப்டன் கம்மின்ஸ் கூப்பிடும் போதெல்லாம் சீரான லைன் அண்ட் லெந்தில் வீசி சன்ரைசர்ஸ் அணிக்கு விக்கெட்டுகளை எடுத்துக்கொடுத்தார்.
சிறப்பாக விளையாடினாலும் நடராஜனுக்கு ஏன் இந்திய அணியில் தற்போது வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்ற கேள்விகள் மட்டும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. பலரும் அவர் தமிழக வீரர் என்பதாலும் சஞ்சு சாம்சனுக்கு சீரான வாய்ப்பை அளிக்காதது போல் நடராஜனுக்கும் வாய்ப்பளிக்க மறுக்கின்றனர் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், கல்லூரி ஒன்றில் மாணவன் எழுப்பிய கேள்விக்கு நடராஜன் பதில் அளித்திருந்தார், அந்த பதிலின் வீடியோதான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. ஹிந்தி தெரியாததால் ஐபிஎல் போட்டியின் பங்கேற்கும் போது கஷ்டப்பட்டதாக கூறியது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஹிந்தி தெரியாததால் ஐபிஎல் அணியில் உள்ள வீரர்களிடம் பேச கஷ்டப்பட்டேன் என்றும் எப்போதும் தனிமையில் இருப்பேன் என்றும் நடராஜன் கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி சமூக வலைத்தளத்தில் நடராஜனுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். அதில் நீங்கள் எங்களுக்கு எப்போதுமே தங்கராஜ் நடராஜன் தான். ஆனால் சிலருக்கு நீங்கள் எவ்வளவு வளர்ந்தாலும் நட்டு நட்டு என்று தான் அழைப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று ஐபிஎல் தொடரில் விளையாட வருகின்ற வெளிநாட்டு வீரர்களான பேட் கம்மின்ஸ், சுனில் நரைன், டிராவிஸ்,ஹெட் பட்லர்,பில் சால்ட் ஆகியோர் எந்த பள்ளியில் ஹிந்தி படித்தார்கள் என்று தெரியவில்லையே என்று ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதேபோன்று உங்களுக்கு ஹிந்தி தெரியாததால் தான் தொடர்ந்து தங்களுக்கு இந்திய அணியில் இடம் தரவில்லையா என்றும் ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பு உள்ளார். இதேபோன்று சேலத்தில் அடகு கடை வைத்திருக்கும் சேட்டுக்கு ஹிந்தி நன்றாக தெரியுமே என்று குறிப்பிட்டுள்ள ராஜீவ் காந்தி, அவர்கள் ஏன் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.