என் அருமை நண்பரே!… உங்களுடன் கொண்டாட வருகிறேன்!… பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் நன்றி!
டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுத்த என் அருமை நண்பர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பதிவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார்கள். இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக் கொள்வதாகவும், கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதாகவும் எக்ஸ் தளத்தில் மேக்ரான் அறிவித்துள்ளார். அந்தவகையில், குடியரசு தின விழாவில் பிரான்ஸ் தலைவர் ஒருவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்வது இது 6வது முறையாகும்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், "உங்கள் அழைப்பிற்கு நன்றி, என் அருமை நண்பர் நரேந்திர மோடி. இந்திய குடியரசு தினத்தை உங்களுடன் கொண்டாட நான் இங்கு வருவேன்!" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இந்தியாவும், பிரான்ஸும் உயர்மட்ட அளவில் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வந்திருந்தார். தொடர்ந்து, 4 மாதங்களில் அவர் மீண்டும் இந்தியா வர உள்ளது குறிப்பிடத்தக்கது.