Ration: பணியில் கண்ணுங்கருத்தமாக இருக்கவேண்டும்!… புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்கவேண்டும்!… அமைச்சர் உத்தரவு!
Ration: புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறைத் தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்களின் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களையும் கடைக்கு வந்து தான் கைவிரல் ரேகைப் பதிவு செய்ய வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்துப் பொருள்களும் கடைகளில் இருப்பதை உறுதி செய்வதோடு, ஒரே நேரத்தில் அனைத்துப் பொருள்களும் அட்டைதாரர்களுக்கு கிடைக்கும் வகையில் ஒதுக்கீடு செய்திட வேண்டும், நெல் கொள்முதலில் எந்தவித முறைகேடுகளுக்கும் இடமின்றி செயல்பட்டுக் கொள்முதல் செய்யும் நெல்லை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்திட வேண்டும், ராகி கொள்முதல் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிகமாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.
அனைத்துப் பொருள்களும் தரமாக இருப்பதைத் தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் உறுதி செய்திடவும், அமுதம் அங்காடிகள் விற்பனையை அதிகரிக்கவும், அனைத்துக் கிடங்குகளையும் தூய்மையாகவும் சுற்றுப்புறத்தை அழகாகவும் பராமரிக்கவும், அரிசிக் கடத்தல் வழித்தடங்களையும் வழிமுறைகளையும் கண்டறிந்து அறவே நிறுத்திட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பொதுமக்களுக்குப் பணியாற்றுவதில் கண்ணுங்கருத்துமாக இருந்து எவ்விதப் புகாருக்கும் இடமின்றிக் கள அலுவலர்கள் செயல்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
Readmore: 4 மணிநேர அறுவை சிகிச்சை!… மூளையில் இருந்த கட்டி அகற்றம்!… நடிகர் அஜித் பற்றி வெளியான தகவல்!