ஆஸ்திரியாவில் மோடி.. இசையால் மெய்சிலிர்க்க வைத்த கலைஞர்கள்!! வீடியோ வெளியிட்ட பிரதமர்!!
பிரதமர் மோடி, ரஷ்யாவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு சென்றுள்ளார். 1983ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி ஆஸ்திரியா நாட்டிற்கு சென்ற பிறகு 41 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் ஒருவர் தற்போது தான் ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - ஆஸ்திரியா உறவானது 75 ஆண்டுகளாக நல்லுறவுடன் இருந்து வருகிறது. 1947இல் இந்தியாவின் சுதந்திரத்தை ஆஸ்திரியா அங்கீகரித்தது. இரு நாடுகளும் 1949இல் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தின. இதன் மூலம் இரு நாடுகளும் பரஸ்பரம் தலைநகரங்களில் தூதரகங்களைக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நேர்மறையான நல்லுறவு, பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்தும் பேணப்படுகிறது.
நேற்று வியன்னா சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க் வரவேற்றார். அதன் பிறகு ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர் பிரதமர் மோடிக்கு அதிபர் மாளிகையில் விருந்தளித்தார். அப்போது பிரதமர் மோடியுடன் ஆஸ்திரிய அதிபர் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, ஆஸ்திரிய இசைக்கலைஞர்கள் நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இசை கலைஞர்கள் வந்தே மாதரம் பாடலை பிரதமர் மோடி முன்னிலையில் இசைத்து கான்பித்தனர். இதனை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “பிரதமர் கார்ல் நெஹமரின், அன்பான வரவேற்புக்கு நன்றி. நாளையும் நமது விவாதங்களை எதிர்நோக்குகிறேன். மேலும் உலக நன்மைக்காக நமது நாடுகள் தொடர்ந்து இணைந்து செயல்படும்” என்று கூறினார். 40 ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஆஸ்திரியா நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.