ஆற்றில் நடக்கும் கொலைகள்..!! உடலை மீட்பதாக கூறி பணம் பறிப்பு..!! இயக்குனர் பாக்யராஜ் பகீர் வீடியோ..!!
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இறந்துள்ள நிலையில், இயக்குநர் பாக்யராஜ் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வெற்றி துரைசாமியின் உடல், விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது.
பாறையின் அடியில் சிக்கியிருந்த நிலையில், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் துயர சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் பகீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ”மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை போன்ற இடங்களில் தாங்கள் படப்பிடிப்பிற்காகச் சென்றபோது அம்பரம்பாளையம் ஆற்றில் சுற்றுலாத் துறையினர் அதிகம் பேர் வருவார்கள் எனவும் அங்கு சுழலில் சிக்கி பலர் இறந்து போவார்கள் என்றும் கூறியுள்ளார். இப்படி இறப்பவர்களின் உடலை மீட்க அங்கு தண்ணீருக்குள் தம் கட்டி எடுப்பவர்கள் சிலர் இருப்பார்கள்.
அவர்களிடம் சூழலை சொல்லி உடலை எடுத்துக் கொடுக்க ஆயிரம் இரண்டாயிரம் என வசதிக்கேற்ப பணம் கொடுப்பார்கள். பின்புதான் தெரியவந்தது, இப்படி சுற்றுலாவுக்கு வருபவர்களை குறிவைத்து இந்தத் தொழில் செய்பவர்கள் தண்ணீருக்கடியில் இழுத்துப் போட்டு பாறைக்குள் சிக்க வைத்து கொன்று விடுவார்கள். அதன் பிறகு, உடலை மீட்டுக் கொடுப்பது போல பணத்தை வாங்கிக் கொள்வார்கள். இந்த விஷயம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இப்போது ஆழம் அதிகம் என போர்டு வைத்துவிடுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.